
மதுரை: சகுனி படத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்யவில்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி நடித்து அண்மையில் வெளிவந்த படம் சகுனி. இந்த படம் தமிழகம் முழுக்க பல்வேறு திரையங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
இந்த படம் மதுரையில் தங்க ரீகல் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்களை உற்சாகப்படுத்த நடிகர் கார்த்தி வருகின்றார் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால் திரையங்கம் முன்பு கூட்டம் அலைமோதியது. அறிவித்தவாறே நடிகர் கார்த்தி திரையங்கிற்கு வந்து ரசிகர்களை சந்தித்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்களது சகுனி படக்குழுவினருக்கு மதுரை ரசிகர்கள் பெரும் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனால் நாங்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளோம். சகுனி படத்தின் வெற்றி இது தான். இந்த வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று வருகின்றேன்.
இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிப் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்காக திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது அரசியல் கலந்த காமெடி படம். இதில் நான் புதுப்புது கதாபாத்திரங்களில் வந்து செல்வது தான் சிறப்பு அம்சம். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பருத்தி வீரன் படம் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அது பெரும் வெற்றியை கொடுத்தது. வெளிநாடுகளிலும் எனக்கு பெரிய மரியாதையை பெற்றுத் தந்தது.
என்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நடிகர் விக்ரம் கூறவில்லை. என் மீது அதிக நம்பிக்கை உள்ளதாகவே கூறியிருந்தார். அவரது பாராட்டு எனக்கு கிடைத்த கவுரவமாகக் கருதுகின்றேன். எனது அண்ணன் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க ஆசை உள்ளது. அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. நல்ல கதையம்சமுள்ள படம் கிடைத்தால் சேர்ந்து நடிப்போம்.
சகுனி படத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை விமர்சித்து இருப்பதாக சிலர் கூறுவது தவறான தகவல். நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். சகுனி படத்தில் எந்த இடத்திலும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்து காட்சியோ அல்லது வசனமோ இல்லை.
அதே போல எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணமும் எனக்கு இல்லை என்றார்.
அப்போது இயக்குனர் சங்கர்தேவன், தயாரிப்பாளர்கள் பிரபு ஞானவேல்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 comments: