
ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் ஜோடியாக மீண்டும் நடிப்பேன்'' என்று நடிகை ஸ்ரீதேவி கூறினார்.
பிரபல நடிகை ஸ்ரீதேவி 14 வருடங்களுக்கு முன்பு இந்தி பட அதிபர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்குப்பின் ஸ்ரீதேவி நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
14 வருடங்களுக்குப்பின் அவர், மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் `இங்கிலீஷ்-விங்கிலீஷ்' என்ற படத்தின் மூலம் அவர் மறுபிரவேசம் செய்து இருக்கிறார்.
இந்த படத்தின் `டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை பி.வி.ஆர். தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது ஸ்ரீதேவி அளித்த கேள்வி பதில் வருமாறு:-
கேள்வி:- இங்கிலீஷ்-விங்கிலீஷ் படத்தை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பீர்களா?
பதில்:- நிச்சயமாக நடிப்பேன். நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவள் அல்லவா? தமிழை எப்படி மறப்பேன்?
கேள்வி:- நீண்டகாலமாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தீர்களே, ஏன் இந்த இடைவெளி?
பதில்:- என் மகள்கள் இருவரும் சின்ன குழந்தைகளாக இருந்தார்கள். அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. இப்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.
கேள்வி:- இப்போதைய தமிழ் பட உலகம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- தமிழ் பட உலகம் தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் கடினமாக உழைக்கிறார்கள்.
கேள்வி:- உங்களுக்கு ஜோடியாக நடித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இன்னமும் கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்:- பெருமையாக நினைக்கிறேன்.
கேள்வி:- உங்கள் மகள்களும் சினிமாவுக்கு வருவார்களா?
பதில்:- முதலில் என்னைப் பாருங்கள். அப்புறம் என் குழந்தைகளை பார்க்கலாம்.
கேள்வி:- இங்கிலீஷ்-விங்கிலீஷ் படத்தில் உங்களுடன் அஜீத்தும் நடித்திருப்பது பற்றி..?
பதில்:- அஜீத்துக்கு ரொம்ப நன்றி சொல்ல வேண்டும். கேட்டவுடன் சம்மதித்து, நடித்துக் கொடுத்தார்.
கேள்வி:- இன்னமும் இளமையாக இருக்கிறீர்களே, அதன் ரகசியம் என்ன?
பதில்:- அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். உணவுக்கட்டுப்பாடு, யோகா போன்ற பயிற்சிகள் மூலம் அழகாக-இளமையுடன் இருக்கலாம் என்றாலும், சந்தோஷம்தான் முக்கியம். சந்தோஷமாக இருந்தால் போதும். அழகும், இளமையும் காப்பாற்றப்படும். நான் சந்தோஷமாக இருக்கிறேன்.
கேள்வி:- உங்கள் மகள்களுக்கு தமிழ் தெரியுமா?
பதில்:- கொஞ்சம் தெரியும்.
கேள்வி:- இன்றைய தமிழ் படங்களில், எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்:- `இங்கிலீஷ்-விங்கிலீஷ்' படத்தில் நான் ஏற்று நடித்த `சசி' என்ற கதாபாத்திரம் போல் நல்ல கதாபாத்திரம், எனக்கு பொருத்தமான கதைகளில் நடிக்க விரும்புகிறேன்.
கேள்வி:- ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?
பதில்:- நிச்சயமாக நடிப்பேன். இரண்டு பேரையும் சமீபத்தில் கூட சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன்.
கேள்வி:- ஜெயபாதுரி, ஹேமமாலினி, ரேகா ஆகியோரைப் போல் நீங்களும் `எம்.பி.' ஆவீர்களா, அரசியலில் ஆர்வம் இருக்கிறதா?
பதில்:- எனக்கு பதவி வேண்டாம். வருடத்துக்கு ஒரு நல்ல படத்தில் நடித்தபடி, என் குழந்தைகளை பார்த்துக் கொண்டால் போதும்.''
இவ்வாறு ஸ்ரீதேவி பதில் அளித்தார்.
பேட்டியின்போது பட அதிபர் பால்கி, டைரக்டர் கவுரி ஷின்டே, நடிகை ப்ரியா ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
.
0 comments: