• அமீரா.. ஞானவேல்ராஜாவா? : தொடரும் பருத்திவீரன் பஞ்சாயத்து!



    கார்த்தி நடித்து வரும் 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெப்சி பிரச்னை தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும்,  அமீர் தான் இதற்கு மிக முக்கிய காரணம் என்று தெரிவித்து இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.


    பெப்சி பிரச்னையால் பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தற்போது ஜீவா நடித்து வரும் 'முகமூடி', கார்த்தி நடித்து வரும் 'அலெக்ஸ் பாண்டியன்' உள்ளிட்ட சில படங்களின் படப்பிடிப்புகள் மட்டுமே நடைபெற்று வந்தன.

    இந்நிலையில், திடீரென 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பில் மட்டும் பெப்சி தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஞானவேல்ராஜா 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    தயாரிப்பாளர் சங்கத்தினரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டு, ஞானவேல்ராஜாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். அப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஞானவேல்ராஜா கூறியிருப்பது:

    " காலைல இருந்து படப்பிடிப்பு நடைபெறவில்லை. பெப்சி பிரச்னை தான் காரணம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். 40 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெற்று, தற்போது தான் படப்பிடிப்பை தொடங்கினோம்.

    எங்கள் படத்துக்கு மட்டும் தான் படப்பிடிப்பு நடைபெறவில்லை. மற்ற படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று சில குழப்பம் வந்தது.

    மறுபடியும் இன்று காலை போன் செய்து நீங்கள் அமீர் அவர்களுடன் பேசி 'பருத்தி வீரன்' பிரச்னை சரி செய்தால் மட்டுமே கலந்து கொள்வோம். இல்லையென்றால் CRANE, CAMERAMAN, LIGHTMAN யாருமே கலந்து கொள்ளமாட்டார்கள்.

    நாங்கள் உடனே இதனை எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு கேட்டோம். ஆனால் தர மறுக்கிறார்கள். ஏனென்றால் 'பருத்திவீரன்' படம் சம்பந்தப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது.

    வழக்கு நிலுவையில் இருக்கும் போது எந்த ஒரு அமைப்பும் அதில் தலையிடக்கூடாது.  அவர்களுக்கும் தெரியும் நாம் இப்போது கேட்பது நியாயமற்றவை என்று.. அதனால் தான் எழுதித் தர மறுக்கிறார்கள். நாங்கள் பிரம்மாண்டமாக அரங்குகள் எல்லாம் அமைந்து படப்பிடிப்பை நடத்தி வந்தோம். சந்தானம், கார்த்தி ஆகியோரின் தேதிகள் வீணாகிறது. இதனால் எங்களுக்கு பலகோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பிரச்னைக்கு எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த தயாரிப்பாளர் சங்கத்திற்கு நன்றி.  இயக்குனர் அமீர் தெளிவாக எனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார்.. ஆனால், பெப்சி ஊழியர்கள் அனைவருமே அமீர் சாருக்காக நாங்கள் செய்கிறோம் என்று தெளிவாக கூறுகிறார்கள்.

    எனது படப்பிடிப்பு மட்டும் தான் பதிக்கப்படுகிறது. வேறு எந்த ஒரு படப்பிடிப்பும் பாதிக்கப்படவில்லை. இது கண்டிப்பாக அமீரின் தூண்டுதல் தான்.

    'பருத்திவீரன்' படத்திற்கு பிறகு நாங்கள்  5வது படத்தினை தயாரித்து வருகிறோம். எங்கள் மீது எந்த ஒரு அமைப்பும் இதுவரைக்கும் 'இவர்கள் எங்களுக்கு சம்பளம் தரவில்லை' என்று தெரிவித்தது இல்லை.

    ஆனால், அமீர் இப்போது 4வது படம் இயக்கி வருகிறார். அவரது முதல் படமான 'மெளனம் பேசியதே' மட்டும் புது தயாரிப்பாளர்.. அதனால் புகார் அளிக்கவில்லை. அதற்கு பிறகு அவர் இயக்கிய அனைத்து படங்களுமே புகார் அளிக்கப்பட்டவை தான். FIRST COPY வாங்கி கொள்வார் அதற்கு பிறகு பல்வேறு பிரச்னைகள் தான்.

    24 CRAFTகள் இருக்கின்றன. எத்தனை CRAFT-ல அவரால் பணநிலுவை இருக்கிறது என்பதை என்னால் நிரூபிக்க முடியும். லேப்பில் இருந்து புகார் கடிதத்தை நான் எடுத்து தருகிறேன். அத்தனை CRAFTலும் புகார்கள் இருக்கின்றன. " என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    'பருத்தி வீரன்' படம் வெளியாவதில் ஏற்பட்ட பிரச்னை இன்னும் முடிந்தபாடு இல்லை. 'அலெக்ஸ் பாண்டியன்' படமும் இப்பிரச்னையில் இருந்து தப்பவில்லை.  விரைவில் முழுமையான தீர்வு காண வேண்டும் என்று கூறிவருகிறார்கள் தமிழ் திரையுலகினர்.

    அமீரா - ஞானவேல்ராஜாவா ?  என்பதை விட, அமீரும் ஞானவேல்ராஜாவும்! என்ற தலைப்பில் நல்ல செய்தி வந்தால் நன்றாக இருக்கும்.

0 comments:

Post a Comment