
ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்து 2007-ல் ரிலீசான ‘சிவாஜி’ படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்தது. ரூ.60 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.128 கோடி வசூல் எட்டியுள்ளதாக கூறப்பட்டது.
‘சிவாஜி’ படத்தை தற்போது ‘3டி’ தொழில்நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கின்றனர். கடந்த சில மாதங்களாக ‘சிவாஜி’யை 3டி-யில் மாற்றும் பணி விறுவிறுப்பாக நடந்தது.
இந்நிலையில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில், நடிகர் ரஜினி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் படத்தின் டிரெய்லர், மற்றும் ‘சிவாஜி’ படத்தை 3டி முறையில் உருவாக்கிய விதம் குறித்தான வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ஹாலிவுட்டையும் மிஞ்சும் அளவுக்கு அமைந்துள்ளது. இத்தொழில்நுட்பத்தில் ரஜினியின் அசத்தலான ஸ்டைல், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் ஐயமில்லை.
இதனை ஆர்வமாக கண்டு ரசித்த ரஜினி, 3டியில் இப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாகவும், பிரமிப்பாகவும் உள்ளது என்றார்.
கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.
0 comments: